Wednesday, May 19, 2010

போங்கடா, நீங்களும் உங்க ஆண்மையும்......!

சிறுபிராயத்தின் ஆசைகள் சிறகடித்த போதிலும், பெற்றொருக்காகவும் உடன்பிறந்தோருக்காகவும் குடும்ப பாரத்தைச் சுமக்கிற பெண்கள் நம் நாட்டில் இலட்சக்கணக்கில் இருப்பார்கள்! ஆனால், அவர்களின் மீது வண்ணவிளக்குகளின் வெளிச்சம் விழாததால், அவர்களது வியர்வையும் இரத்தமும் இன்னும் குழாய்த்தண்ணீரோடு ஒப்பிடப்படவில்லை.

ஒரு பெண்ணை அவமானப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு, அந்தப் பெண்ணின் பெயரைத் தன் மீது எழுதிக்கொண்டு, அவளுக்கு அணிவிக்க விரும்பிய செருப்புமாலையைத் தான் அணிந்து கொண்டு ஒரு ஆண் கழுதை மீது ஏறி ஊர்வலம் போனபோது, அவன் தன்னைப் பெற்ற தாயின் கருப்பையைக் கொச்சைப்படுத்தியிருப்பதை மீசை வைத்த மற்ற ஆண்கள் உணரவில்லை.

பணத்துக்காக நடிகைகள் எதையும் செய்வார்கள் என்று ஒரு இயக்குனர் சொன்னபோது, அந்த இயக்குனருக்கு இருந்த அரசியல் தொடர்பு காரணமாக, பொதுமக்களின் பிரதிநிதிகளோ கலாச்சாரத்தின் காவலர்களோ புருவத்தைக் கூட நெரிக்கவில்லை. அந்த இயக்குனர் வருத்தம் தெரிவித்ததும் அந்த சம்பவம் மறக்கப்பட்டது; மண்ணோடு மண்ணாகப் புதைக்கப்பட்டது.

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம்மைச் சூழ்ந்திருக்கிற விபரீதக்கலாச்சாரத்தின் வீச்சு குறித்து எதார்த்தமாக ஒரு பெண்மணி கருத்துச் சொன்னதும் கோவலர்களுக்குக் கோபம் வந்து விட்டது. சீழ் படிந்திருந்த நெற்றிக்கண்களைத் திறந்தபடி, சில போலிக்கடவுளர்கள் பொத்துக்கொண்டு வந்த சினத்தால் அனல்பறக்கும் நீதிமன்ற வழக்குகளை அடுத்தடுத்துத் தொடுத்தனர். மேடைகளில் ஆபாச வார்த்தைகளை அள்ளியள்ளி இறைத்தனர்.

கண் துடைக்கப் பயன்படாத கைக்குட்டைகளை வாயில் அடைத்துக்கொண்டு வாளாவிருந்தது சாமானியனின் சமூகம்! வார்த்தைகளால் ஒரு பெண் துகிலுரியப்படுவதைப் பார்த்துக்கொண்டு வாயிலிருந்து நீரை வழிய விட்டன வல்லூறுகள்! காசுக்காய் கடைவிரித்த பத்திரிகைகள், அந்தப் பெண்ணின் மார்பு தெரியும் படங்களை முகப்பில் போட்டு மந்தகாசப்புன்னகை செய்தன.

உச்சநீதிமன்றம் ஓங்கிக் குட்டிய குட்டில், பாசாங்கு செய்தவர்கள் பாதாலத்தில் அமிழ்ந்தனர். பலி ஆடு தப்பித்து விட்டதே என்று பரிதவித்தன உருப்படாத ஓநாய் கூட்டங்கள்!

ஓட ஓட விரட்டி, அந்தப் பெண்ணும் அரசியலுக்குள் நுழைந்ததும், தரங்கெட்ட வார்த்தைகளை மீண்டும் தத்தெடுத்துக்கொண்டிருக்கின்றனர் சில உத்தமபுத்திரர்கள். அவளது கடந்தகாலப் பக்கங்களை எடுத்துத் திருத்தி எழுதி திருப்தியடைந்து கொண்டிருக்கின்றனர் சில தில்லுமுல்லுக்காரர்கள்!

அந்தப் பெண்ணின் சமூகத்தைச் சேர்ந்தவளாய், ஒரு பெண்ணாய் அவரது துணிச்சலுக்குத் தலை வணங்குகிறேன். அவர் சொன்னதை ஏற்றுக்கொள்ளும் திராணியற்று, அவரை இழித்துப் பேசி ஈனப்படுத்த நினைக்கும் உளுத்துப்போன உள்ளங்களைப் பார்த்து, ’பெண் ஜெயித்து விட்டாள்,’ என்று பேருவகை கொள்ளுகிறேன்.

போங்கடா, நீங்களும் உங்க ஆண்மையும்......!