Friday, September 10, 2010

வந்திட்டாங்க சொம்பைத் தூக்கிட்டு....!

ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இரண்டு செய்திகளோடு, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டு நேற்றுமுதல் வலையுலகில் விவாதிக்கப்படுகிற ஒரு பிரச்சினை குறித்து சில வரிகள் எழுத விருப்பம்.

முதல் செய்தி: தன்னை பலாத்காரம் செய்துவிட்டதாக, ஒரு இந்தி நடிகர் மீது புகார் கொடுத்த ஒரு பெண், இப்போது தான் பலாத்காரமே செய்யப்படவில்லை என்று நீதிமன்றத்தில் பல்டி அடித்திருக்கிறார்.

இரண்டாவது செய்தி: பிரபல வயலின் கலைஞர் மீது அவர் வீட்டுப் பணிப்பெண் பலாத்கார குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறார்.

முதலாவது செய்தியில், உண்மையிலேயே அந்த நடிகர் நிரபராதியாக இருந்து, பொய்க்குற்றம் சாட்டப்பட்டு இத்தனை நாட்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தால், அவர் மீது பரிதாபப்படுவோம்; அந்தப் பெண்ணின் மீது நமக்கு எரிச்சல் ஏற்படும். சொந்தப்பகையைத் தீர்த்துக்கொள்ள, பலாத்காரம் என்ற பாதகச்செயல் செய்ததாகப் பசப்பியதற்காக ஆத்திரம் பொங்கும். அத்துடன், இரண்டாவது செய்தியில் பலாத்காரம் செய்யப்பட்டதாகச் சொன்ன அந்தப் பெண்ணின் குற்றச்சாட்டின் நம்பகத்தன்மையின் மீது சந்தேகம் ஏற்படும். இவ்விரண்டு செய்திகளிலும் உண்மையிருந்தால் அந்த ஆண்களைத் தண்டிக்க நாம் எப்படித் துடிக்கிறோமோ, அதே துடிப்பு இவ்விரண்டு செய்திகள் பொய்களாய் இருக்கும்பட்சத்தில் அந்தப் பெண்களை மன்னித்து மறந்துவிட்டு விடாமலிருக்கவும் நமக்கு அறிவுறுத்த வேண்டும்.

உங்கள் சொந்தச் சண்டைகளைத் தீர்த்துக்கொள்ள இணையத்தின் பரப்பையும், அங்கே கட்டப்பஞ்சாயத்து நடத்துகிற கருங்காலிகளின் உதவியையும் நாடாதீர்கள் - ஆணாதிக்கம் என்ற பெயரில்! பெண்ணுரிமை என்பது ஏதேனும் ஒரு காரணத்துக்காக திரும்பத் திரும்ப ஆண்களை எதிர்க்க, ஆண்களின் ஆதரவையே நாடுவது என்ற நகைமுரண் அல்ல! ஒரு பெண்ணின் பரிணாம சிந்தனை வளர்ச்சி அது! அதை கூட்டம்போட்டுத் துவைத்தெடுக்கிற அடாவடித்தனமாக்கி, பெண்ணியத்தைக் கேலி செய்பவர்களின் வாயில் அவல் போட்டு விடாதீர்கள்!

சம்பந்தப்பட்ட இடுகைகளை வாசித்தாலே, அந்த சகோதரிக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க முகாந்திரங்கள் பல வாய்த்திருக்கின்றன என்பதனை அவர் வாயிலாகவே அறிகிறோம். முறைப்படி சட்டபூர்வமான நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு, சொந்தப் பிரச்சினையை, ஆம், இது அவர் சொந்தப் பிரச்சினைதான், பொதுவிடத்தில் விவாதித்து, அனுதாபம் தேடுகிற அனாவசிய முயற்சிகளை செய்து பெண்ணுரிமையை மூணு முழம் பத்து ரூபாய்க்கு மாட்டுத்தாவணி பேருந்துநிலையத்தில் விற்பனை செய்து விடாதீர்கள்.

பெண்ணை வேண்டுமென்றே இழிவு செய்கிறவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் சட்டம், நியாயம், மனிதாபிமானம் போன்றவற்றை மதிக்கத்தெரியாதவர்கள் என்பது வெளிப்படை. அவர்களுக்கு பாடம் புகட்டுவதாக எண்ணிக்கொண்டு, நாமும் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டால், இருபாலாருக்கும் என்ன வித்தியாசம் இருக்கப்போகிறது?

தங்களுக்கு வருகிற தனிமடல்களையும், மின்னரட்டை சம்பாஷணைகளையும் பொதுவில் போட்டு வெளுத்துக்கொண்டிருக்கிறவர்கள் எவ்வளவு தூரம் நம்பத்தக்கவர்கள்? அவர்களையும் ஆண், பெண் என்று பிரித்துப் பார்க்க வேண்டுமா? இதென்ன கேலிக்கூத்து...?

பெண்களுக்காக உதட்டளவில் அனுதாபப்படுகிற ஆண்களின் எண்ணிக்கை பெயரளவில் மட்டும் வேண்டுமானால் அதிகமாக இருக்கலாம். ஆனால், இது போன்ற விஷயங்களை ஆண்,பெண் பாகுபாட்டின் அடிப்படையில் அணுகி, ஊதிப்பெரிதாக்கினால், அது பெண்களின் மீது உண்மையான அனுதாபமும் கரிசனையும் உள்ள ஆண்களையும் நம்மிடமிருந்து விலக்கி, முதலைக்கண்ணீர் விடுகிற மோசடி ஆசாமிகளையே எங்கு பார்க்கினும் கொண்டுவந்து நிறுத்தும் என்பது திண்ணம்

Thursday, June 17, 2010

எத்தனை பெண்கள் அறிவார்?

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து தூத்துக்குடி வரையிலான பயணத்தின் போது, ஜன்னல் இருக்கையைக் கொடுத்ததன் மூலம் சினேகிதமான ஒரு சட்டக்கல்லூரி மாணவியுடன் உரையாடும் வாய்ப்புக் கிட்டியது. நான் ஒரு பிஸியோதெரபிஸ்ட் என்றதும் என்னை ஏற இறங்கப் பார்த்து பொருள்பொதிந்த சிரிப்பை உதிர்த்தார்.

"மதுரையிலே ஹோம் சர்வீஸுக்குக் கூட நிறைய பேர் போகிறார்களாமே?"

"ஆமாம்! நான் கூட போவதுண்டு!" என்று பதிலளித்தபோது அவரிடமிருந்து அடுத்து என்ன கேள்வி வரப்போகிறது என்று என்னால் எதிர்பார்க்க முடிந்தது.

"தொந்தரவு எதுவுமில்லையே?"

இந்தக் கேள்விக்கு ’இல்லை.’ என்று பதில் சொல்ல முடியாத இயலாமை குறித்து நான் சங்கடப்பட வேண்டுமா அல்லது அப்படியொரு பாதுகாப்பின்மை இருப்பது குறித்து, இவ்விதமான சூழலை ஏற்படுத்துகிற சில ஆண்கள் வெட்கப்பட வேண்டுமா என்பதே எனது குழப்பம்!

"தொந்தரவு எல்லா இடத்திலும் தானிருக்கிறது," என்று முதலில் தொட்டும் தொடாமலும் பதிலளித்தேன். ஆனால், மதுரையின் எல்லையைத் தாண்டுவதன் முன்னமே அவரது கேள்விக்கு, அவர் எதிர்பார்த்ததைக் காட்டிலும் சற்று அதிகமாகவே பதிலளித்து விட்டிருந்தேன்.

"என்னத்தைப் பண்ணுறது?" என்று முடித்தபோது, அதுவரை சகபயணியாக இருந்த அந்த இளம்பெண், தனது வழக்குரைஞர் முகத்தைப் புனைந்து கொண்டார்.

"நாம ரொம்ப பயப்படுறா மாதிரியில்லே?" என்று சிரித்தார். "விருப்பமில்லாமத் தொடறது ஒருபக்கம்! தகாத வார்த்தைகள் பேசுறது, அசிங்கமான சைகைகள் காட்டுறது, அருவருப்பான நடவடிக்கைகள், இவ்வளவு ஏன், கண்ணடிக்கிறது கூட ஒரு விதமான பாலியல் கொடுமை தான்! நம்ம நாட்டுலே இதுக்கு மட்டும் இன்னும் சரியான, வலுவான சட்டங்கள் இல்லாமப் போயிடுச்சு! சில பிரபலங்கள் குறித்த பாலியல் கொடுமை குற்றச்சாட்டுக்கள் இருந்தபோதும், சுலபமாத் தப்பிச்சிக்கிட்டாங்க! ஒரு விதத்துலே பலாத்காரம் மட்டும் தான் பாலியல் கொடுமைன்னு நம்ம சட்டம் சொல்லுதோன்னு தோணுது!"

நானும் அவரோடு சேர்ந்து சிரித்தேன்.

"ஆமா! எங்க மருத்துவமனையில் ஒரு முறை ஒரு பலாத்காரம் செய்யப்பட்ட பெண் அனுமதிக்கப்பட்டாள். எத்தனை நிருபர்கள்? எத்தனை கேமிராக்கள்? ஐ.சீ.யூவில் இரத்தப்போக்கு நிற்காமல் அந்தப் பெண் வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவே போராடிக்கொண்டிருக்க, இவர்களுக்கு தலைப்புச் செய்திக்கான நேரம் போய்க்கொண்டிருக்கிறதே என்று கவலை!"

"போலீஸ் வந்தார்களோ?" அக்கறையோடு கேட்டார் அந்தப் பெண்.

"ஓ! மருத்துவமனையிலிருந்தே தகவல் கொடுத்து விட்டார்கள்!"

"நல்ல வேளை! உங்களுக்குத் தெரியுமா? நமது நாட்டில் பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டவர்களில் நூற்றுக்கு இரண்டு சதவிகிகம் பெண்கள் தான் புகார் அளிக்க முன்வருகிறார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. அப்படியே புகாரும் அளித்து, குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டு விட்டாலும் கூட, அதிகபட்ச தண்டனை இரண்டு ஆண்டுகள் தான்! மேலும் குற்றவாளி தாராளமாக ஜாமீனும் பெற்றுக்கொண்டு சென்று விடலாம்!"

கேட்கக் கேட்க ஆத்திரம் கொப்பளித்துக் கொண்டு வந்தது எனக்கு.

"எப்படியம்மா புகார் கொடுப்பார்கள்? போலீஸ் ஸ்டேஷனுக்குப் போக ஆண்களே பயப்படுகிறார்களே? பெண்கள் எப்படிப் போவார்கள்?" என்று பொறுக்க மாட்டாமல் கேட்டேன்.

"உண்மை தான்!," என்று ஆமோதித்த அந்தப் பெண்," உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? இன்னும் பாலியல் பலாத்காரம் போன்ற புகார்களை, சட்ட ஒழுங்குப் பிரச்சினைகளைப் போல, வழக்கமான காவல் நிலையங்களில் தான் பதிவு செய்ய வேண்டும் என்று பலர் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதை முழுக்க முழுக்க பெண் காவலர்கள் பணி புரியும் மகளிர் காவல் நிலையங்களிலேயே பதிவு செய்யலாம்!"

"யாருக்குத் தெரிகிறது இது போன்ற சட்டங்கள் எல்லாம்?" என்று விரக்தியோடு கேட்டேன்.

"தெரிந்து கொள்ளுங்களேன்! பொதுவாக மகளிர் காவல் நிலையம் என்றாலே வரதட்சிணைக் கொடுமை, கணவனின் வன்முறை போன்ற குடும்பச் சச்சரவுகளைத் தீர்க்கிற இடமாகத் தான் கருதுகிறார்கள். இது குறித்து குற்றவியல் நடைமுறையில் திருத்தங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால், இது எத்தனை காவல் நிலைய அதிகாரிகளுக்குத் தெரிந்திருக்கும் என்பதே சந்தேகம் தான்!" என்று அவர் கூறியபோது சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை. ஆனால், அவர் அடுத்ததாகச் சொன்ன செய்தியைக் கேட்டு ஒரு கனம் அதிர்ந்து விட்டேன்.

"கடந்த நாற்பது ஆண்டுகளில், இந்தியாவில் எது வளர்ந்திருக்கிறதோ இல்லையோ, கற்பழிப்பு வழக்குகள் மட்டும் சுமார் 700 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது!"

"ஐயோ, புகார் கொடுத்தவங்க கணக்கே இவ்வளவுன்னா, கற்பனை பண்ணவே பயமாயிருக்கே?"

சிறிது நேரம் தனக்குத் தெரிந்த சட்டங்கள் குறித்து எனக்கு அந்தப் பெண்மணி விளக்கியதோடு, தான் ஒரு குறிப்பேட்டில் எழுதி வைத்திருந்தவற்றையும் எனக்கு வாசித்துக் காட்டினார். பாலியல் பலாத்காரம் சட்டத்தில், நல்ல வேளையாக, இப்போது சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கினார். அதன் படி, ஒரு பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளியை அதிகபட்சமாக ஐந்து குற்றங்களின் அடிப்படியில் தண்டிக்க வழிவகைகள் செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

"இவையெல்லாம் நடைமுறைப்படுத்தப் படுமா?" என்று கேட்டேன்.

"நடைமுறைப்படுத்த வேண்டும்! அப்போது தான் பயம் வரும்! இரண்டு வருடங்களோடு இது நிற்காது என்ற புரிதலும் ஏற்படும்!" அவர் கூறியது அப்போது எனக்கும் சரியென்று பட்டது. ஆனால், இப்போது ’பாலியல் பலாத்காரம் என்பது திட்டமிட்டுச் செயல்படுத்தப்படுகிற குற்றமா அல்லது ஒரு வெறிக்கணத்தில் நிகழ்த்தப்படுகிற கொடூர செயலா என்று சற்றே குழப்பமேற்பட்டது. அதை தெளிவித்துக் கொள்ள வேண்டும்!

"நீங்கள் சொல்லுகிற மாதிரியே பொது இடங்களில் தொந்தரவு செய்கிற ’நல்ல புள்ளை’களுக்கும் நரம்பெடுக்கிற மாதிரி சட்டம் வருமா?" என்று கேட்டேன்.

’வந்துட்டா மட்டும்.....?’ என்று கேட்டுச் சிரித்தார் அந்தப் பெண்மணி!

அட, ஆமா இல்லே? வந்திட்டா மட்டும்????????????????????????????

Monday, June 14, 2010

சேட்டைக்காரனுக்கு ஒரு வேண்டுகோள்!

நகைச்சுவை என்பதன் முழுமையான பரிமாணத்தை இந்த ஒரு சில மாதங்களில் நான் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்ததற்கு சேட்டைக்காரன் ஒரு முக்கிய காரணம்.

பிறரைச் சிரிக்க வைப்பது அனைவராலும் முடியாது; அதிலும் எவர் மனதையும் புண்படுத்தாமல், சற்றும் விரசம் கலக்காமல் நகைச்சுவையாக எழுதுவது ஒரு அலாதியான கலை! இப்படி எழுதுகிறவர்களில் முதன்மையானவர் சேட்டைக்காரன்!

சமகால நிகழ்வுகள் குறித்த அவரது இடுகைகளில் நகைச்சுவை கொப்பளித்தாலும், அனைவரையும் போல அவர் தன்னைச் சுற்றியிருக்கிற சமூகத்தை கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதைத் தெள்ளத்தெளிவாக உணரமுடியும்.

இணையத்தில் இன்றளவில் எனக்கிருக்கிற விரல்விட்டு எண்ணக் கூடிய நல்ல நட்புக்களில் அவரும் ஒருவர்; அவரே முதலானவரும் கூட!

சோர்ந்திருக்கும் பொழுதுகளில், உற்சாகத்தைப் பீறிட வைத்து மனம்விட்டுச் சிரிக்க வைத்த சேட்டைக்காரன், வலையுலகத்திலிருந்து வனவாசம் செல்வது எனக்கும் என் நட்பு வட்டத்துக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பார்கள்; சேட்டைக்காரனின் இடுகைகள் பலருக்கு உற்சாக ஊட்டச்சத்து மருந்தாக இருந்தது என்பதை நான் அறிவேன்.

சேட்டைக்காரன்! நீங்கள் யார், எந்த ஊர், உங்களது உண்மையான பெயர் என்ன - இவை யாருக்கும் தெரியாது. இப்படியொரு விபரீதமான முடிவை மேற்கொள்ளுமளவுக்கு நடந்தது என்ன? - இதுவும் தெரியாது.

ஆனால், மீண்டும் வருவீர்களா? விரைந்து வருவீர்களா? எங்களை மீண்டும் சிரிப்புக்கடலில் ஆழ்த்துவீர்களா?

காத்திருக்கிறோம், நம்பிக்கையோடு!

Wednesday, May 19, 2010

போங்கடா, நீங்களும் உங்க ஆண்மையும்......!

சிறுபிராயத்தின் ஆசைகள் சிறகடித்த போதிலும், பெற்றொருக்காகவும் உடன்பிறந்தோருக்காகவும் குடும்ப பாரத்தைச் சுமக்கிற பெண்கள் நம் நாட்டில் இலட்சக்கணக்கில் இருப்பார்கள்! ஆனால், அவர்களின் மீது வண்ணவிளக்குகளின் வெளிச்சம் விழாததால், அவர்களது வியர்வையும் இரத்தமும் இன்னும் குழாய்த்தண்ணீரோடு ஒப்பிடப்படவில்லை.

ஒரு பெண்ணை அவமானப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு, அந்தப் பெண்ணின் பெயரைத் தன் மீது எழுதிக்கொண்டு, அவளுக்கு அணிவிக்க விரும்பிய செருப்புமாலையைத் தான் அணிந்து கொண்டு ஒரு ஆண் கழுதை மீது ஏறி ஊர்வலம் போனபோது, அவன் தன்னைப் பெற்ற தாயின் கருப்பையைக் கொச்சைப்படுத்தியிருப்பதை மீசை வைத்த மற்ற ஆண்கள் உணரவில்லை.

பணத்துக்காக நடிகைகள் எதையும் செய்வார்கள் என்று ஒரு இயக்குனர் சொன்னபோது, அந்த இயக்குனருக்கு இருந்த அரசியல் தொடர்பு காரணமாக, பொதுமக்களின் பிரதிநிதிகளோ கலாச்சாரத்தின் காவலர்களோ புருவத்தைக் கூட நெரிக்கவில்லை. அந்த இயக்குனர் வருத்தம் தெரிவித்ததும் அந்த சம்பவம் மறக்கப்பட்டது; மண்ணோடு மண்ணாகப் புதைக்கப்பட்டது.

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம்மைச் சூழ்ந்திருக்கிற விபரீதக்கலாச்சாரத்தின் வீச்சு குறித்து எதார்த்தமாக ஒரு பெண்மணி கருத்துச் சொன்னதும் கோவலர்களுக்குக் கோபம் வந்து விட்டது. சீழ் படிந்திருந்த நெற்றிக்கண்களைத் திறந்தபடி, சில போலிக்கடவுளர்கள் பொத்துக்கொண்டு வந்த சினத்தால் அனல்பறக்கும் நீதிமன்ற வழக்குகளை அடுத்தடுத்துத் தொடுத்தனர். மேடைகளில் ஆபாச வார்த்தைகளை அள்ளியள்ளி இறைத்தனர்.

கண் துடைக்கப் பயன்படாத கைக்குட்டைகளை வாயில் அடைத்துக்கொண்டு வாளாவிருந்தது சாமானியனின் சமூகம்! வார்த்தைகளால் ஒரு பெண் துகிலுரியப்படுவதைப் பார்த்துக்கொண்டு வாயிலிருந்து நீரை வழிய விட்டன வல்லூறுகள்! காசுக்காய் கடைவிரித்த பத்திரிகைகள், அந்தப் பெண்ணின் மார்பு தெரியும் படங்களை முகப்பில் போட்டு மந்தகாசப்புன்னகை செய்தன.

உச்சநீதிமன்றம் ஓங்கிக் குட்டிய குட்டில், பாசாங்கு செய்தவர்கள் பாதாலத்தில் அமிழ்ந்தனர். பலி ஆடு தப்பித்து விட்டதே என்று பரிதவித்தன உருப்படாத ஓநாய் கூட்டங்கள்!

ஓட ஓட விரட்டி, அந்தப் பெண்ணும் அரசியலுக்குள் நுழைந்ததும், தரங்கெட்ட வார்த்தைகளை மீண்டும் தத்தெடுத்துக்கொண்டிருக்கின்றனர் சில உத்தமபுத்திரர்கள். அவளது கடந்தகாலப் பக்கங்களை எடுத்துத் திருத்தி எழுதி திருப்தியடைந்து கொண்டிருக்கின்றனர் சில தில்லுமுல்லுக்காரர்கள்!

அந்தப் பெண்ணின் சமூகத்தைச் சேர்ந்தவளாய், ஒரு பெண்ணாய் அவரது துணிச்சலுக்குத் தலை வணங்குகிறேன். அவர் சொன்னதை ஏற்றுக்கொள்ளும் திராணியற்று, அவரை இழித்துப் பேசி ஈனப்படுத்த நினைக்கும் உளுத்துப்போன உள்ளங்களைப் பார்த்து, ’பெண் ஜெயித்து விட்டாள்,’ என்று பேருவகை கொள்ளுகிறேன்.

போங்கடா, நீங்களும் உங்க ஆண்மையும்......!

Sunday, February 21, 2010

பிரியாவிடை

இறுகிய மனமும்
இளகிய கண்களும்
இனியென்னவென்ற வினாவுமாய்
என் தாய்!

ஒருவரது கண்ணீர்த்துளிகள்
மற்றவரது கரத்தில்
மாறி மாறி விழுந்து கொண்டிருந்தன.

இறுதியாய் என்னிடம் அப்பா சொன்னது
ஒரே வார்த்தை தான்
"உம்மாவை......."

அவரைப் பேசவும் விடாமல்
அழைத்துச்சென்றது
அவசரக்கார மரணம்

அந்தரத்தில் நின்றுவிட்ட
ரங்கராட்டினமாய் நாங்கள்!

பெய்துகொண்டிருந்த பேய்மழை
செவிலியர்களின் காலணிச்சத்தம்
தம்பி,தங்கையின் விசும்பல்
இவற்றை விடவும்
உம்மாவின் மவுனம்
உரத்து உரத்துக் கேட்டது

வெள்ளைவாகனத்தில் வந்தவருக்காக
வாசலில்
கருப்புவாகனம் காத்திருந்தது

நாட்காட்டி உதிர்த்த தேதிகளை
மீண்டும் ஒட்டமுடியாதா?

இனி ஊருக்கு வருகையில்
ஒருஜோடிக் கண்களும்
ஒரு கோடிக் கனவுகளும்
குறைந்திருக்கப்போகின்றன

அப்பாவின் நினைவுகள்!
நிலைப்படியிலிருந்து
தாழ்வாரம்வரையிலும்
நிறைந்திருக்கப்போகின்றன