Thursday, June 17, 2010

எத்தனை பெண்கள் அறிவார்?

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து தூத்துக்குடி வரையிலான பயணத்தின் போது, ஜன்னல் இருக்கையைக் கொடுத்ததன் மூலம் சினேகிதமான ஒரு சட்டக்கல்லூரி மாணவியுடன் உரையாடும் வாய்ப்புக் கிட்டியது. நான் ஒரு பிஸியோதெரபிஸ்ட் என்றதும் என்னை ஏற இறங்கப் பார்த்து பொருள்பொதிந்த சிரிப்பை உதிர்த்தார்.

"மதுரையிலே ஹோம் சர்வீஸுக்குக் கூட நிறைய பேர் போகிறார்களாமே?"

"ஆமாம்! நான் கூட போவதுண்டு!" என்று பதிலளித்தபோது அவரிடமிருந்து அடுத்து என்ன கேள்வி வரப்போகிறது என்று என்னால் எதிர்பார்க்க முடிந்தது.

"தொந்தரவு எதுவுமில்லையே?"

இந்தக் கேள்விக்கு ’இல்லை.’ என்று பதில் சொல்ல முடியாத இயலாமை குறித்து நான் சங்கடப்பட வேண்டுமா அல்லது அப்படியொரு பாதுகாப்பின்மை இருப்பது குறித்து, இவ்விதமான சூழலை ஏற்படுத்துகிற சில ஆண்கள் வெட்கப்பட வேண்டுமா என்பதே எனது குழப்பம்!

"தொந்தரவு எல்லா இடத்திலும் தானிருக்கிறது," என்று முதலில் தொட்டும் தொடாமலும் பதிலளித்தேன். ஆனால், மதுரையின் எல்லையைத் தாண்டுவதன் முன்னமே அவரது கேள்விக்கு, அவர் எதிர்பார்த்ததைக் காட்டிலும் சற்று அதிகமாகவே பதிலளித்து விட்டிருந்தேன்.

"என்னத்தைப் பண்ணுறது?" என்று முடித்தபோது, அதுவரை சகபயணியாக இருந்த அந்த இளம்பெண், தனது வழக்குரைஞர் முகத்தைப் புனைந்து கொண்டார்.

"நாம ரொம்ப பயப்படுறா மாதிரியில்லே?" என்று சிரித்தார். "விருப்பமில்லாமத் தொடறது ஒருபக்கம்! தகாத வார்த்தைகள் பேசுறது, அசிங்கமான சைகைகள் காட்டுறது, அருவருப்பான நடவடிக்கைகள், இவ்வளவு ஏன், கண்ணடிக்கிறது கூட ஒரு விதமான பாலியல் கொடுமை தான்! நம்ம நாட்டுலே இதுக்கு மட்டும் இன்னும் சரியான, வலுவான சட்டங்கள் இல்லாமப் போயிடுச்சு! சில பிரபலங்கள் குறித்த பாலியல் கொடுமை குற்றச்சாட்டுக்கள் இருந்தபோதும், சுலபமாத் தப்பிச்சிக்கிட்டாங்க! ஒரு விதத்துலே பலாத்காரம் மட்டும் தான் பாலியல் கொடுமைன்னு நம்ம சட்டம் சொல்லுதோன்னு தோணுது!"

நானும் அவரோடு சேர்ந்து சிரித்தேன்.

"ஆமா! எங்க மருத்துவமனையில் ஒரு முறை ஒரு பலாத்காரம் செய்யப்பட்ட பெண் அனுமதிக்கப்பட்டாள். எத்தனை நிருபர்கள்? எத்தனை கேமிராக்கள்? ஐ.சீ.யூவில் இரத்தப்போக்கு நிற்காமல் அந்தப் பெண் வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவே போராடிக்கொண்டிருக்க, இவர்களுக்கு தலைப்புச் செய்திக்கான நேரம் போய்க்கொண்டிருக்கிறதே என்று கவலை!"

"போலீஸ் வந்தார்களோ?" அக்கறையோடு கேட்டார் அந்தப் பெண்.

"ஓ! மருத்துவமனையிலிருந்தே தகவல் கொடுத்து விட்டார்கள்!"

"நல்ல வேளை! உங்களுக்குத் தெரியுமா? நமது நாட்டில் பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டவர்களில் நூற்றுக்கு இரண்டு சதவிகிகம் பெண்கள் தான் புகார் அளிக்க முன்வருகிறார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. அப்படியே புகாரும் அளித்து, குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டு விட்டாலும் கூட, அதிகபட்ச தண்டனை இரண்டு ஆண்டுகள் தான்! மேலும் குற்றவாளி தாராளமாக ஜாமீனும் பெற்றுக்கொண்டு சென்று விடலாம்!"

கேட்கக் கேட்க ஆத்திரம் கொப்பளித்துக் கொண்டு வந்தது எனக்கு.

"எப்படியம்மா புகார் கொடுப்பார்கள்? போலீஸ் ஸ்டேஷனுக்குப் போக ஆண்களே பயப்படுகிறார்களே? பெண்கள் எப்படிப் போவார்கள்?" என்று பொறுக்க மாட்டாமல் கேட்டேன்.

"உண்மை தான்!," என்று ஆமோதித்த அந்தப் பெண்," உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? இன்னும் பாலியல் பலாத்காரம் போன்ற புகார்களை, சட்ட ஒழுங்குப் பிரச்சினைகளைப் போல, வழக்கமான காவல் நிலையங்களில் தான் பதிவு செய்ய வேண்டும் என்று பலர் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதை முழுக்க முழுக்க பெண் காவலர்கள் பணி புரியும் மகளிர் காவல் நிலையங்களிலேயே பதிவு செய்யலாம்!"

"யாருக்குத் தெரிகிறது இது போன்ற சட்டங்கள் எல்லாம்?" என்று விரக்தியோடு கேட்டேன்.

"தெரிந்து கொள்ளுங்களேன்! பொதுவாக மகளிர் காவல் நிலையம் என்றாலே வரதட்சிணைக் கொடுமை, கணவனின் வன்முறை போன்ற குடும்பச் சச்சரவுகளைத் தீர்க்கிற இடமாகத் தான் கருதுகிறார்கள். இது குறித்து குற்றவியல் நடைமுறையில் திருத்தங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால், இது எத்தனை காவல் நிலைய அதிகாரிகளுக்குத் தெரிந்திருக்கும் என்பதே சந்தேகம் தான்!" என்று அவர் கூறியபோது சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை. ஆனால், அவர் அடுத்ததாகச் சொன்ன செய்தியைக் கேட்டு ஒரு கனம் அதிர்ந்து விட்டேன்.

"கடந்த நாற்பது ஆண்டுகளில், இந்தியாவில் எது வளர்ந்திருக்கிறதோ இல்லையோ, கற்பழிப்பு வழக்குகள் மட்டும் சுமார் 700 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது!"

"ஐயோ, புகார் கொடுத்தவங்க கணக்கே இவ்வளவுன்னா, கற்பனை பண்ணவே பயமாயிருக்கே?"

சிறிது நேரம் தனக்குத் தெரிந்த சட்டங்கள் குறித்து எனக்கு அந்தப் பெண்மணி விளக்கியதோடு, தான் ஒரு குறிப்பேட்டில் எழுதி வைத்திருந்தவற்றையும் எனக்கு வாசித்துக் காட்டினார். பாலியல் பலாத்காரம் சட்டத்தில், நல்ல வேளையாக, இப்போது சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கினார். அதன் படி, ஒரு பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளியை அதிகபட்சமாக ஐந்து குற்றங்களின் அடிப்படியில் தண்டிக்க வழிவகைகள் செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

"இவையெல்லாம் நடைமுறைப்படுத்தப் படுமா?" என்று கேட்டேன்.

"நடைமுறைப்படுத்த வேண்டும்! அப்போது தான் பயம் வரும்! இரண்டு வருடங்களோடு இது நிற்காது என்ற புரிதலும் ஏற்படும்!" அவர் கூறியது அப்போது எனக்கும் சரியென்று பட்டது. ஆனால், இப்போது ’பாலியல் பலாத்காரம் என்பது திட்டமிட்டுச் செயல்படுத்தப்படுகிற குற்றமா அல்லது ஒரு வெறிக்கணத்தில் நிகழ்த்தப்படுகிற கொடூர செயலா என்று சற்றே குழப்பமேற்பட்டது. அதை தெளிவித்துக் கொள்ள வேண்டும்!

"நீங்கள் சொல்லுகிற மாதிரியே பொது இடங்களில் தொந்தரவு செய்கிற ’நல்ல புள்ளை’களுக்கும் நரம்பெடுக்கிற மாதிரி சட்டம் வருமா?" என்று கேட்டேன்.

’வந்துட்டா மட்டும்.....?’ என்று கேட்டுச் சிரித்தார் அந்தப் பெண்மணி!

அட, ஆமா இல்லே? வந்திட்டா மட்டும்????????????????????????????

15 comments:

ராஜவம்சம் said...

இந்தப்பதிவில் சில தகவல் பறிமாற்றத்திர்க்கு
நன்றி

சட்டம் கடுமையானால் குற்றம்குரையும் என்பது என் கருத்து

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

/////"நீங்கள் சொல்லுகிற மாதிரியே பொது இடங்களில் தொந்தரவு செய்கிற ’நல்ல புள்ளை’களுக்கும் நரம்பெடுக்கிற மாதிரி சட்டம் வருமா?" என்று கேட்டேன்.

’வந்துட்டா மட்டும்.....?’ என்று கேட்டுச் சிரித்தார் அந்தப் பெண்மணி!
//////


உங்களின் ஆதங்கம் நியாயமானதுதான் .

Chitra said...

"கடந்த நாற்பது ஆண்டுகளில், இந்தியாவில் எது வளர்ந்திருக்கிறதோ இல்லையோ, கற்பழிப்பு வழக்குகள் மட்டும் சுமார் 700 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது!"

"ஐயோ, புகார் கொடுத்தவங்க கணக்கே இவ்வளவுன்னா, கற்பனை பண்ணவே பயமாயிருக்கே?"


..... Nightmare...... Can't something be done - really - legally - psychologically - ethically?????

அநன்யா மஹாதேவன் said...

ஒரு சாதாரண பேருந்து பிரயாணத்தில உருப்படியான தகவலகளை பரிமாறிக்கொண்டுள்ளீர்கள்.

கொஞ்சம் அதிகமான தண்டனை கொடுத்தா, கட்டாயம் இந்த வன்முறைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம். இந்த மாதிரி நடந்துக்கறவங்க எல்லாமே சைக்கோக்கள்ன்னு நான் நினைக்கறேன்.

Sabarinathan Arthanari said...

நுணுக்கமான தகவல்கள்

நன்றி

Sabarinathan Arthanari said...

பலாத்காரம் நடந்த இடம்/பெண் இடம் இருந்து மருத்துவ சம்பந்தமான ஆதாரங்கள் பெறும் வகையில் ஆராய்ச்சி நடைபெறுகிறதா ?

இது தொடர்பான தகவல்கல் உள்ளனவா ?

புவனேசுவரி said...

தண்டித்தால் போதாது; துண்டிக்க வேண்டும்!

தனி காட்டு ராஜா said...

//"கடந்த நாற்பது ஆண்டுகளில், இந்தியாவில் எது வளர்ந்திருக்கிறதோ இல்லையோ, கற்பழிப்பு வழக்குகள் மட்டும் சுமார் 700 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது!"//

பாலியல் வறட்சி கொண்ட இருட்டு கலாச்சார தேசம் இது ......

//"நடைமுறைப்படுத்த வேண்டும்! அப்போது தான் பயம் வரும்! இரண்டு வருடங்களோடு இது நிற்காது என்ற புரிதலும் ஏற்படும்!" //

பயந்துக்கிட்டு தப்பு பண்ணாம இருந்தாலும் ...ஆழ் மனதில் உள்ள மிருகதன்மை அப்படியே தான் இருக்கும்.....
யாரும் காமத்தை பற்றி புரிந்து கொள்ளவோ அல்லது கடந்து செல்லவோ தயாராகவும் இல்லை ....அதை பற்றி ஒரு விழிப்புணர்வும் இல்லை ...
ஆணின் பாலியல் பற்றிய புரிதல் எத்தனை பெண்களுக்கு உள்ளது ....அதே போல் பெண்ணின் பாலியல் பற்றிய புரிதல் எத்தனை ஆண்களுக்கு உள்ளது ...
காமத்தை பற்றி பேசினாலே சமுகத்தில் நம் image damage ஆகி விடும் ....நம் சமூக லச்சணம் இது ...
ஒன்றை பற்றி தெளிவை ஏற்படுத்துவது தான் ...பூச்சாண்டி (பயம் ) காட்டுவதை விட சிறந்தது ...

யுக கோபிகா said...

கிழ்கண்ட வலைதளத்துக்கு சென்று இருக்கிறிர்களா ?
http://linguamadarasi.blogspot.com

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மாதர் சங்கங்கள் (மற்றவர்களும்தான்) மக்க்ளிடையே குறிப்பாகப் பெண்களிடையே இதுபற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிக்கலாம்!
ஆட்சியாளர்களுக்கும் இது குறித்த விழிப்புணர்வும் அக்கறையும் அவசியம்! நம்ம நாட்டுல எப்போ இதெல்லாம் வந்து...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ஐ.சீ.யூவில் இரத்தப்போக்கு நிற்காமல் அந்தப் பெண் வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவே போராடிக்கொண்டிருக்க, இவர்களுக்கு தலைப்புச் செய்திக்கான நேரம் போய்க்கொண்டிருக்கிறதே என்று கவலை//

ஊடக வணிகத்தில் கிடைக்கும் வருமானமும், இருக்கும் போட்டியும், அவர்களை மனிதர்கள் என்ற தன்மையிலிருந்து மாற்றி வெகுநாட்களாயிற்று!

அன்புடன் மலிக்கா said...

//கொஞ்சம் அதிகமான தண்டனை கொடுத்தா, கட்டாயம் இந்த வன்முறைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம்.//

அதையேதான் நானும் சொல்கிறேன். ஆனா அதுக்கும் சண்டைக்கு கிளம்பிவிடுறாங்களே அநன்யா...


நல்லதொரு பதிவு தொடர்து எழுதுங்கள் சிந்தனைகள் கலைகட்டடும்
சிலபல சிற்றுவேலைகளாவது முறியடிக்கப்படட்டும்..

sweatha said...

I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

என்ன செய்தாலும் குற்றங்கள் குறைய வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது.. அவர்களாக மனம் மாறினால் தான் உண்டு...

நல்ல காலம் பிறக்கும் என்று நம்புவோம்..

நல்ல எழுத்து நடை சகோதரி..

வாழ்த்துக்கள்..

jothi said...

//வந்துட்டா மட்டும்.....?’//


என்ன‌ சொல்ற‌து???

:(((((((((